மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி புதைக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு தோண்டி எடுப்பு - ஆறுமுகநேரியில் பரபரப்பு
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி புதைக்கப்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் ஆறுமுகநேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 35). இவருக்கும், ஆறுமுகநேரி பேயன்விளை புதூரை சேர்ந்த சுமதி (27) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சுமதி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமதி, வெங்கடசாமியை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அங்கு சுமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த 3 நாட்களில் உடல்நலக்குறைவால் இறந்து விட்டது. இதையடுத்து குழந்தையின் உடலை சுமதியின் பெரியப்பா கோவில்பிள்ளை என்பவரின் வீட்டுக்கு பின்னால் புதைத்தனர்.
இதற்கிடையே வெங்கடசாமி தனது 2-வது குழந்தையை சுமதியின் குடும்பத்தினர் விற்று விட்டார்கள். எனக்கு குழந்தை வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். சுமதி தரப்பில் குழந்தை இறந்து விட்டதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, குழந்தை புதைக்கப்பட்டதாக சொல்லும் இடத்தை சோதனை செய்து, குழந்தை இறந்து இருந்தால் அதனை உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகநேரி போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் திருச்செந்தூர் தாசில்தார் (பொறுப்பு) சித்ரா, உதவி தாசில்தார் கோபால், வருவாய் அதிகாரி பொன்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன் மற்றும் போலீசார் முன்னிலையில் குழந்தை புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இடத்தை தோண்டும் பணி நடந்தது. அப்போது, அங்கு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன், குழந்தை இறந்ததை உறுதி செய்யும் விதமாக ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த சம்பவம் ஆறுமுகநேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story