தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை
x
தினத்தந்தி 5 March 2019 4:00 AM IST (Updated: 4 March 2019 7:21 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு காலிகுடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வேடியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, எங்கள் கிராமத்தினர் 100 குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். கடந்த சில வாரங்களாக எங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் தேடி பல்வேறு இடங்களுக்கு அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

குடிநீர் பிரச்சினை காரணமாக மாணவ–மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே நாங்கள் வசிக்கும் பகுதியில் ஆழ்துளை கிணறு (போர்வெல்) மற்றும் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story