ஆம்பூர் அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்று சிறுத்தை மீண்டும் அட்டகாசம் வனத்துறை வைத்த கூண்டில் பிடிபடாததால் விவசாயிகள் அச்சம்

ஆம்பூர் அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்று சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. வனத்துறையினர் கூண்டு வைத்தும் அதில் சிக்காமல் சிறுத்தை சுற்றித்திரிவதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. கடந்த 2 மாதங்களாக மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளையும், பட்டியில் விவசாயிகள் அடைத்து வைத்துள்ள ஆடுகளையும் அந்த சிறுத்தை அடித்துக்கொன்று வருகிறது.
இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளையும், 4-க்கும் மேற்பட்ட மாடுகளையும் சிறுத்தை கொன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆம்பூர் வனத்துறைக்கு தொடர்ந்து அளித்த புகாரின் பேரில் சிறுத்தையை பிடிக்க அவர்கள் 2 கூண்டுகளை வைத்தனர். ஆனால் சிறுத்தை இதுவரை சிக்கவில்லை.
அரங்கல்துருகம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனி (வயது 47), பசு மாடுகளை வளர்த்து விவசாயம் பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று மீண்டும் கன்றுக்குட்டியை அடித்து கொன்றது. மறுநாள் காலையில் இதனைப் பார்த்த பழனி அதிர்ச்சி அடைந்து ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொன்னபல்லியை சேர்ந்த 3 ஆடுகளை சிறுத்தை கடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,“ சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அளித்தால் வனத்துறையினர் இப்பகுதிக்கு வந்து பெயரளவில் மட்டுமே விசாரித்து செல்கின்றனர். அதன்பிறகு அதனை கண்டுகொள்வது கிடையாது. அது குறித்து கேட்டால் கூண்டு வைத்துள்ளோம்” என்று பதில் மட்டும் சொல்கின்றனர். இப்பகுதியில் ஏராளமான ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளது. எனவே வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில வனத்துறையும் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story