வாணாபுரம் அருகே கத்தி, உருட்டுக்கட்டைகளுடன் இருதரப்பினர் மோதல் சமாதானம் செய்த 2 போலீஸ்காரர்கள் படுகாயம்
வாணாபுரம் அருகே இருதரப்பினர் கத்தி, உருட்டுக்கட்டைகளுடன் மோதிக்கொண்டனர். அவர்கள் தாக்கியதில் சமரசப்படுத்தச்சென்ற 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.
வாணாபுரம்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாணாபுரம் அருகே அத்திப்பாடி கிராமம் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 62) என்பவர் சாலை பணிகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார்.
இவர் அந்த பகுதியில் சாலை அமைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவரது மகன் ஜெகன்ராஜ் (37) என்பவர் சாலை அமைப்பது குறித்து சுப்பிரமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து இரு தரப்பினரும் வாணாபுரம் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சுப்பிரமணி தரப்பினரும், ஜெகன்ராஜ் தரப்பினரும் நேற்று மதியம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கத்தி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரை தாக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீஸ்காரர் பாண்டியன் படுகாயம் அடைந்தனர். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகருக்கு கையில்எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாணாபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் முரளிதரன் தகராறில் ஈடுபட்டவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் இருதரப்பை சேர்ந்த சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானதால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story