பொய் புகார் அளித்த வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை


பொய் புகார் அளித்த வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

பொய் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய வைத்த வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் அளித்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே மேக்கிழார்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘அம்பேத்கர் நகரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டி சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். இதுவரை சரிசெய்யப்படவில்லை. மாற்று மேல்நிலைத் தொட்டியும் கட்டப்படவில்லை. எனவே, புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும். தற்போது குடிநீருக்காக ஒரு ஆழ்துளை கிணறு மட்டுமே உள்ளது. அதிலும் தண்ணீர் குறைவாக உள்ளதால், மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில் கடமலைக் குண்டு பழங்குடியினர் காலனியை சேர்ந்த மக்கள், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் சுருளி மலை பகுதிக்கு பழங்குடியின மக்கள் தேன், கடுக்காய் போன்ற பொருட்கள் சேகரிக்கச் சென்றபோது பெண்களுக்கு வனத்துறையினர் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இதன்தொடர்ச்சியாக கடமலைக்குண்டுவில் உள்ள மேகமலை வனச்சரகர் அலுவலகத்துக்கு நியாயம் கேட்கச் சென்றபோது வனத்துறையினர் எங்களை அடித்து உதைத்ததோடு, நாங்கள் அந்த அலுவலகத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் பொய் புகார் அளித்தனர். அதன்பேரில் பழங்குடியின மக்கள் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 48 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தும், 3 ஆண்டுகள் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கும் அலைந்து மன உளைச்சல் அடைந்தோம்.

இந்நிலையில் இந்த வழக்கில் பழங்குடியின மக்களை விடுதலை செய்து மாவட்ட செசன்சு கோர்ட்டு கடந்த 21-ந்தேதி உத்தரவிட்டது. எனவே பொய் புகார் அளித்து, பொய் சாட்சியம் அளித்த வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story