பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்திய மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளது மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேச்சு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில் இந்திய மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி - மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தர்மபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.358.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை 100 சதவீதம் ரெயில்வே துறை நிதி மூலம் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் ரெயில்வே இணை மந்திரிகள், ஏ.கே.மூர்த்தி, வேலு, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி, உதவி கலெக்டர் சிவன் அருள், முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ்கோயல் கலந்து கொண்டு தர்மபுரி - மொரப்பூர் இடையே 36 கி.மீ. தூரத்திற்கு புதிய ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தாம்பரம் - திருநெல்வேலி, திருநெல்வேலி - தாம்பரம் இடையேயான அந்த்யோதயா தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் சந்திப்பு வரை நீட்டிப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர் இடையேயான தினசரி விரைவு ரெயில் இயக்கத்தை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். விமான படையில் பணியாற்றி தீவிரவாதிகளுக்கு எதிராக மெச்சத்தகுந்த தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அபிநந்தன் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். குறிப்பாக தமிழக மக்களுக்கு பெரிய சிறப்பை பெற்று தந்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில் இந்திய மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளது. எதிரிகள் நம்மை தாக்கினால் 10 மடங்கு திருப்பி தாக்கும் வல்லமை நம்மிடம் உள்ளது என்பதை நிரூபித்து உள்ளோம். சில அரசியல் கட்சிகள் ஊழல் செய்வதை பற்றி சிந்தித்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் பாகிஸ்தானை போல் நமது தாக்குதலை சந்தேக கண்ணோடு பார்க்கின்றன. விமானப்படை வீரர்களின் தியாகத்தை கூட சந்தேக கண்ணோடு பார்ப்பது வெட்கத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. இதேபோல் ரெயில்வே துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தி வரும் பொறியாளர்களையும், மேக்-இன் இந்தியா திட்டத்தின் மூலம் சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்படும் மேம்பட்ட பணிகள் குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இத்தாலியில் இருந்து தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் தகுதி படைத்தவர்கள். நாம் இத்தாலிக்கே தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்பவர்களாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மிக நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி தர்மபுரி - மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க.வும் இந்த திட்டத்தை நிறைவேற்ற இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தர்மபுரி - மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்ட பணிகள் உடனடியாக தொடங்கும்.
இந்த திட்டத்தின் நிர்வாக அதிகாரியாக சுதாகர்ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். 36 கி.மீ. தூரம் கொண்ட இந்த ரெயில் பாதை திட்டத்தில் ஏற்கனவே 31 கி.மீ. தூரத்திற்கு உரிய நிலம் ரெயில்வேயிடம் இருக்கிறது. கூடுதலாக 5 கி.மீ.தூரத்திற்கு மட்டும் 44 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தபட வேண்டும். அந்த பணிக்கு தர்மபுரி மாவட்ட மக்களும், மாவட்ட நிர்வாகமும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஓசூர் - பெங்களூரு இடையே உள்ள ரெயில் பாதையை இருவழிப்பாதையாகவும், மின்பாதையாகவும் மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தர்மபுரி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஓசூர் - தர்மபுரி வழியாக சேலம் வரை உள்ள ரெயில் பாதையை இருவழி மின்சார ரெயில் பாதையாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான சர்வே பணிகள் தொடங்கப்படும். சென்னை - பாலக்காடு இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயணிகள் வசதிக்காக மொரப்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் இப்போது என்னிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.
மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய இந்தியாவை முன்னேற்ற பாதையில் உலகின் தலைசிறந்த நாடாக உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் வீடு, ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை, 24 மணி நேரமும் மின்சார வசதி, ஆயுஸ்மான் பாரத் திட்டம் மூலம் மருத்துவ காப்பீடு, அனைவருக்கும் தரமான கல்வி, சாலை, ரெயில், விமான போக்குவரத்து மேம்பாடு என ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகள் நீண்டகாலம் பயன்பெற உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்களை மிகக்குறைந்த தொகையை செலுத்த செய்து அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் ஒய்வூதியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படும் மோடி தலைமையிலான அரசுக்கு நீங்கள் ஆதரவை தர வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணி வலிமையான கூட்டணியாகும். நாளை நமதே. 40-ம் நமதே.
இவ்வாறு மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் பேசினார்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று கோஷம் எழுப்ப வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று ‘பாரதமாதாவுக்கு ஜே’ என்று கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story