தாசில்தார்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தாசில்தார்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் 13 தாலுகாக்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 270 தாசில்தார்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 12 தாசில்தார்கள் கடலூர், காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தேர்தல் பணியை மேற்கொள்ள சிரமமான நிலை ஏற்படும் என்பதாலும் எனவே இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாக்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், மத்திய செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மகளிர் அணி மாவட்ட தலைவர் நெகருனிஷா, மாவட்ட துணைத்தலைவர்கள் கண்ணன், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் வானூரில் வட்ட தலைவர் குமார் தலைமையிலும், உளுந்தூர்பேட்டையில் வட்ட செயலாளர் தவமணி தலைமையிலும், கள்ளக்குறிச்சியில் மாவட்ட பொருளாளர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலும், சின்னசேலத்தில் மாவட்ட இணை செயலாளர் பாலு தலைமையிலும், சங்கராபுரத்தில் வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையிலும், திருக்கோவிலூரில் மாவட்ட இணை செயலாளர் சுந்தர் தலைமையிலும், கண்டாச்சிபுரத்தில் மாவட்ட இணை செயலாளர் சந்திரமோகன் தலைமையிலும், செஞ்சியில் வட்ட தலைவர் தியாகராஜன் தலைமையிலும், திண்டிவனத்தில் மாவட்ட துணைத்தலைவர் பிரபுவெங்கடேசன் தலைமையிலும், மரக்காணத்தில் மாவட்ட இணை செயலாளர் ஏழுமலை தலைமையிலும், விக்கிரவாண்டியில் மாவட்ட இணை செயலாளர் முருகன் தலைமையிலும், மேல்மலையனூரில் வட்ட தலைவர் பழனி தலைமையிலும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு தங்கள் போராட்டத்தை தொடங்கி மதியம் 2 மணிக்கு முடித்துக்கொண்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story