சேலம் புதிய பஸ்நிலையம் அருகே ரூ.50 லட்சத்தில் அம்மா சுற்றுச்சூழல் அரங்கம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


சேலம் புதிய பஸ்நிலையம் அருகே ரூ.50 லட்சத்தில் அம்மா சுற்றுச்சூழல் அரங்கம் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 4 March 2019 5:59 PM GMT)

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சுற்றுச்சூழல் அரங்கை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம், 

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒவ்வொரு மாவட்ட தலைமையிடத்திலும் அம்மா சுற்றுச்சூழல் அரங்குகள் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி சேலம் மாநகராட்சி சார்பில் புதிய பஸ்நிலையம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அம்மா சுற்றுச்சூழல் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுற்றுச்சூழல் அரங்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து ரூ.61.10 கோடியில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டம் ஆகியவற்றின் கீழ் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தனிக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை மறுசீரமைப்பு செய்திடவும், மழைநீர் வடிகால் பணி மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை சீர் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மேலும், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சேலம் கோட்டை சின்னசாமி தெருவில் ரூ.3.51 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அம்மா சுற்றுச்சூழல் அரங்கை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் பார்வைக்காக சுற்றுச்சூழல் அரங்கு திறந்து வைக்கப்பட்டது. முகப்பில் குழந்தைகளை கவரும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் யானை, காட்டெருமை, சிங்கம், புலி, சிறுத்தை, மான், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளுடைய உருவங்கள் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.

Next Story