நங்கவள்ளி அருகே கார் மோதி கர்ப்பிணி, மாணவன் பலி: விடிய, விடிய பொதுமக்கள் சாலை மறியல் விபத்து ஏற்படுத்திய டிரைவர் கைது


நங்கவள்ளி அருகே கார் மோதி கர்ப்பிணி, மாணவன் பலி: விடிய, விடிய பொதுமக்கள் சாலை மறியல் விபத்து ஏற்படுத்திய டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-04T23:33:08+05:30)

நங்கவள்ளி அருகே கார் மோதியதில் கர்ப்பிணி, மாணவன் பலியானதை கண்டித்து பொதுமக்கள் விடிய, விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பதற்றமான நிலை நிலவியது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மேச்சேரி,

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள நங்கவள்ளி பெரியசோரகையை சேர்ந்தவர் ராமசந்திரன். இவருடைய மனைவி மணிமேகலை(வயது 29). 8 மாத கர்ப்பிணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் நங்கவள்ளி-தாரமங்கலம் சாலையில் பெரியசோரகை பஸ் நிறுத்தம் டீக்கடை அருகே மணிமேகலை குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக குடத்துடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலம் நோக்கி தாறுமாறாக வந்த கார் ஒன்று, நடந்து சென்ற மணிமேகலை மீது மோதியது. அதோடு அவர் பக்கத்தில் நின்றிருந்த பெருமாள் என்பவரின் மகன் கமல்ராஜ்(15) மீது மோதியதோடு அந்த கார் டீக்கடைக்குள் புகுந்து நின்றது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் மணிமேகலையும், கமல்ராஜூம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். டீக்கடைக்குள் கார் புகுந்த சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பதறி அடித்து கொண்டு அங்கு ஓடி வந்தனர்.

அதற்குள் காரில் இருந்த 3 பேரும் கதவை திறந்து கொண்டு அவசரமாக அங்கிருந்து வெளியே ஓடினார்கள். உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதற்கிடையே கார் மோதிய விபத்தில் காயம் அடைந்த மணிமேகலை, கமல்ராஜ் ஆகிய 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் இறந்த கமல்ராஜ் வனவாசி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 3 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது நங்கவள்ளி அருகே மலையடிப்பட்டியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்(வயது 27) என்பதும் உடன் வந்தது அவரது நண்பர்கள் 2 பேர் எனவும் தெரிய வந்தது.

இந்த நிலையில் கார் மோதிய விபத்தில் 2 பேரும் உயிரிழந்ததை அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் பெரியசோரகை பஸ் நிறுத்தம் அருகே நடுரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள், விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவர் மீதும், அந்த காரில் வந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே வேகமாக வருகின்ற வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகளை தடுக்க பெரியசோரகை பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த சாலை மறியல் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நீடித்தது.

விடிய, விடிய நடந்த சாலை மறியல் காரணமாக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிகாலை 3 மணியளவில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு பெரியசோரகை பகுதிக்கு அடக்கம் செய்ய வரும் போது முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். நேற்று மதியம் 2 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை முடிந்து பள்ளி மாணவன் கமல்ராஜ், மணிமேகலை உடல்கள் பெரியசோரகைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பெரியசோரகை பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதன்பிறகு இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story