சேலம் லீ பஜாரில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடங்குகிறது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை


சேலம் லீ பஜாரில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடங்குகிறது விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
x
தினத்தந்தி 5 March 2019 3:30 AM IST (Updated: 4 March 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

சேலம் லீ பஜாரில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணிகள் தற்போது மீண்டும் தொடங்குகிறது. பணிகள் முடிந்து விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம், 

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏ.வி.ஆர். ரவுண்டானா, 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை மற்றும் புதிய பஸ்நிலையம், 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுதவிர, முள்ளுவாடி கேட், அணைமேடு, செவ்வாய்பேட்டை ஆகிய 3 இடங்களிலும் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் ரெயில்வே மேம்பாலங்களும் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதலாவதாக லீ பஜாரில் இருந்து செவ்வாய்பேட்டைக்கு ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் ரூ.46 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 25.8.2014 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

அதாவது முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி, அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது அவர் அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு லீ பஜாரில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட தண்டவாளத்தை தாண்டி இருபுறத்திலும் ஓரளவுக்கு மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்பேட்டை பகுதியில் சிலர், மேம்பாலத்திற்கு தேவையான நிலத்தை கொடுக்காமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்ததால் ரெயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அதாவது லீ பஜார்-செவ்வாய்பேட்டை இடையே 80 சதவீதம் மேம்பால பணிகள் முடிவடைந்த நிலையில், மீண்டும் ரெயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கப்படும் என்று மாநகர மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் கோர்ட்டு மூலம் சமீபத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் ரூ.11 கோடி வரை கோர்ட்டு மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த லீ பஜார்- செவ்வாய்பேட்டை ரெயில்வே மேம்பால பணிகள் தற்போது மீண்டும் தொடங்குகிறது. இதற்காக லீ பஜார் பகுதியில் மேம்பாலத்தை ஒட்டியுள்ள பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலை இடிக்கும் பணிகளுக்கு நேற்று பூஜை போடப்பட்டது. இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அந்த கோவிலை இடித்து பாலத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த உள்ளார்கள். இதன்பிறகு மேம்பாலத்திற்கு தேவையான இணைப்பு சாலை போடப்பட்டு முறைப்படி விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் லீ பஜார்-செவ்வாய்பேட்டை இடையே அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சினை எல்லாம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. மேம்பால பணிகள் அனைத்தும் விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Next Story