கோட்டூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்


கோட்டூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-05T00:27:35+05:30)

கோட்டூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

கோட்டூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரங்களை கஜா புயல் சுருட்டி சென்றது. புயலின் பாதிப்பு தொடர்ந்து எதிரொலித்த வண்ணம் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளுக்கான நிவாரணத்தொகை கிடைக்காதவர்கள் இன்னும் ஏராளமானோர் உள்ளனர்.

இவர்கள் தினமும் அதிகாரிகளை தேடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து வருகிறார்கள். புயல் வீசி 109 நாட்கள் ஆன பின்னரும் வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. அதேபோல அன்றாட வருமானத்துக்கு உதவி அளித்து வந்த ஆடு, கறவை மாடு, கோழி உள்ளிட்டவற்றை இழந்தவர்களும் நிவாரணம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கோட்டூர், செருகளத்தூர், நொச்சியூர், சித்தமல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்களின் கூரை வீடுகள் பல புயலில் ஒட்டு மொத்தமாக சேதம் அடைந்தன. ஏராளமான ஆடு, மாடுகள் இறந்தன. புயல் சேத கணக்கெடுப்பு முறையாக நடக்காததால் இந்த கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு நிவாரணம் சென்று சேரவில்லை.

இதுகுறித்து அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிவாரணம் கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்ததால் விரக்தி அடைந்த கிராம மக்கள் நேற்று சித்தமல்லி கடைவீதியில் உள்ள அண்ணா சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புயல் நிவாரணத்தொகையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். போராட்டத்துக்கு பால்சாமி தலைமை தாங்கினார். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story