இலக்கை துல்லியமாக தாக்கினோம் ‘பயங்கரவாதிகளின் சாவு எண்ணிக்கையை கணக்கிடவில்லை’- விமானப்படை தளபதி பேட்டி
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமாக தாக்கினோம். பயங்கரவாதிகளின் சாவு எண்ணிக்கையை கணக்கிடவில்லை என விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறினார். விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா நேற்று கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை,
புலவாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. எங்களின் நோக்கம் இலக்கை துல்லியமாக தாக்குவது மட்டுமே.
இறந்தவர்களின் எண்ணிக்கையை நாங்கள் கணக்கிடவில்லை. கணக்கிடவும் முடியாது. அங்கு பயங்கரவாதிகள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெரியாது. அது குறித்து அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும். தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அது பற்றி வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே தெளிவாக விளக்கம் அளித்து உள்ளார்.
நாங்கள் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கவில்லை என்றும், வனப்பகுதியில் தாக்குதல் நடத்தியதாகவும் வரும் செய்திகள் தவறானவை. நாங்கள் வனப்பகுதியில் குண்டுகளை வீசினால் எதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது குறித்து பேச வேண்டும்?. அடுத்த நாள் காஷ்மீர் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்த வேண்டும்?. நாங்கள் இலக்கை துல்லியமாக தாக்கியதற்கு இதுவே ஆதாரம்.
இந்திய எல்லையில் வந்து பாகிஸ்தானின் நவீனரக போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய போது பழமையான மிக்-21 ரக விமானங்களை பயன்படுத்தியதாக கூறுகின்றனர். மிக்-21 ரக விமானங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டு உள்ளது. நவீன அம்சங்களுடன் கூடிய மிக்-21 விமானங்களே விமானப்படையில் உள்ளன. எதிரிகள் தாக்குதல் நடத்தினால் எந்த விமானம் தகுதியாக இருக்கிறதோ அதை பயன்படுத்துவோம்.
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட விமானி அபிநந்தன் நாடு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் உடல் தகுதி பெற்ற பின்னர் பணியில் இணைவார். ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும்.பெங்களூரு விமானப்படை கண்காட்சியின் போது போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதும், காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும் ஏன்? என்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story