போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய வழக்கு: 2 போலீசார் பணிநீக்கம்


போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய வழக்கு: 2 போலீசார் பணிநீக்கம்
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-05T01:03:57+05:30)

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பியதில் தொடர்புடைய 2 போலீசார் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மும்பை, 

மும்பையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் 51 பேர் வெளிநாடுகளுக்கு டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதில் குடிமை பிரிவு அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் என பலருக்கும் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 குடிமை பிரிவு அதிகாரிகள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், கோமல் டாப்கர் என்ற பெண் போலி பாஸ்போர்ட்டில் கனடா சென்றபோது, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்.

முன்னதாக அவர் மும்பையில் இருந்து சென்றபோது, விமான நிலையத்தில் குடிமை பிரிவு அதிகாரிகளுடன் சோதனை பணியில் ஈடுபட்ட மும்பை போலீசின் சிறப்பு பிரிவை சேர்ந்த போலீஸ்காரர்கள் சச்சின் தேஷ்பாண்டே மற்றும் ராஜேஸ் கோட்சே ஆகியோர் கோமல் டாப்கரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த விசாரணை நிறைவில், இருவருக்கும் போலி பாஸ்போர்ட், விசா மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பியதில் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இருவரும் மும்பை போலீசில் இருந்து அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

Next Story