ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 2-வது நாளாக நடந்தது


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 2-வது நாளாக நடந்தது
x
தினத்தந்தி 4 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-05T01:06:24+05:30)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கரியாப்பட்டினத்தில் விவசாயிகள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்,

காவிரி டெல்டா மாவட்டமான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திட்டத்துக்கு எதிர்பு தெரிவித்து வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே விவசாயிகள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்பு குழு ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து தலைமை தாங்கினார்.

இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனிடையே மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என போராட்ட குழுவினர் தெரிவித்தனர். 

Next Story