சில்வாசாவில் இருந்து வேனில் ரூ.15 லட்சம் மதுபானம் கடத்தி வந்த 2 பேர் கைது
சில்வாசா பகுதியில் இருந்து ரூ.15 லட்சம் மதுபானம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
யூனியன் பிரதேசமான தத்ரா நகர் ஹவேலியின் சில்வாசா பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக கல்யாண் கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் வாடா-பிவண்டி ரோடு பகுதியில் கலால் துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு வேனை வழிமறித்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது காய்கறி ஏற்றி செல்வதாக டிரைவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இருப்பினும் அதிகாரிகள் காய்கறி இருந்த பெட்டிகளை அகற்றி சோதனை நடத்தினர்.
இதில், காய்கறிகளுக்கு அடியில் பிளாஸ்டிக் பேப்பரால் மூடப்பட்டு ஏராளமான மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனில் இருந்த 120 பார்சல்கள் அடங்கிய மதுபான பாட்டில்கள் மற்றும் சரக்கு வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். இது குறித்து கலால்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து வேனை ஓட்டி வந்த ராஜஸ்தானை சேர்ந்த குந்தன்குமார், ஜகதீஷ் சுத்தார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், குறைந்த விலையில் கிடைக்கும் மதுபானங்களை மும்பைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story