கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்- விசாரணை 18-ந் தேதிக்கு தள்ளி வைப்பு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்- விசாரணை 18-ந் தேதிக்கு தள்ளி வைப்பு
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதோடு, எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜாமீனில் உள்ள சம்சீர் அலி, சதீசன், சந்தோஷ்சாமி, உதயகுமார், ஜித்தின்ராய் ஆகிய 5 பேர் நீதிபதி வடமலை முன்பு ஆஜரானார்கள். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்படும் ஷயான், மனோஜ், திபு, பிஜின், மனோஜ்சாமி ஆகியோருடன் பகல் 12 மணிக்கு கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி தெரிவித்தார்.

அப்போது வக்கீல்கள் சிவக்குமார், ரவிக்குமார் ஆகியோர் ஷயான், மனோஜை தவிர திபு, பிஜின், மனோஜ்சாமி ஆகிய 3 பேருக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

ஆனால் அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஜாமீன் மனுவை ஏற்கக்கூடாது என்று வாதிட்டார். இதற்கிடையில் போலீஸ் பாதுகாப்புடன் ஷயான், மனோஜ் உள்பட 5 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஷயான், மனோஜ் ஆகியோரை தவிர மற்ற 8 பேர் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி வக்கீல் ஆனந்த் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தும், ஷயான், மனோஜ் உள்பட 5 பேரை நீதிமன்ற காவலில் வைக்கும்படியும் நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 

Next Story