திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்த தொழிலாளியால் பரபரப்பு


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்த தொழிலாளியால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-05T01:35:27+05:30)

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனைவி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிப்பதற்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தலைமையில் அதிகாரிகள் மனுக்களை வாங்கி கொண்டு இருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களும் மனு கொடுப்பதற்காக நின்று கொண்டு இருந்ததால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

பொதுவாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது கடந்த காலங்களில் சிலர் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபட்டதால் போலீசார் பிரதான வாசல் மற்றும் பின்வாசல் பகுதிகளில் மனு கொடுக்க வருபவர்களை நன்றாக சோதனை செய்தே அனுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் சோகமே உருவாக நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரும் அருகில் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே ஒரு வித பதற்றத்துடன் நின்றனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு பொன்னுசாமி மற்றும் போலீசார் அங்கு வந்து அந்த பெண் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர்.

அப்போது அந்த பையில் மண்எண்ணெய் நிரப்பப்பட்ட ஒரு பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாட்டிலின் மீது துணியை சுற்றி மறைத்து இருந்தனர். மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் அந்த பெண்ணின் பெயர் நாகராணி, அவரது கணவர் பெயர் பாரதிராஜா என்றும் கூலி தொழிலாளி எனவும் தெரியவந்தது. மேலும் அந்த பெண் தனது மாமனார் ராஜரத்தினம், மாமியார் லலிதா ஆகியோருடன் வந்திருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியபோது கதறி அழுத அந்த பெண், நாங்கள் துறையூர் தாலுகா கண்ணனூர் மகாலட்சுமி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டிற்கு செல்லும் பொது பாதையை சிலர் வேலி போட்டு அடைத்து விட்டனர். இதனால் நாங்கள் வீட்டுக்குள் செல்ல முடியாமல் கடந்த சில நாட்களாக தவித்து வருகிறோம். எத்தனை நாள் வெளியில் தங்குவது? இதுபற்றி துறையூர் தாலுகா அலுவலகத்தில் பல முறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் பாதையை அடைத்தவர்கள் எங்களை குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். அதனால் தான் வேறு வழியின்றி குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வது என்ற நோக்கத்தில் வந்தோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர் என்று வாக்குமூலம் அளித்தார்.

சரியான நேரத்தில் போலீசார் கண்காணித்து மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்ததால் தீக்குளிப்பு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story