ரூ.8½ கோடியில் புதிய கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


ரூ.8½ கோடியில் புதிய கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-05T01:42:17+05:30)

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.8½ கோடியில் புதிய கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் ஊராட்சியில், மாவட்ட அளவிலான ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்தார். அதன் அடிப்படையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனம் தற்காலிகமாக இயங்கிவந்தது. பின்னர் இந்நிறுவனத்திற்கு தலா 8 ஆயிரத்து 226 சதுரஅடி பரப்பில் தரைதளமும், முதல்தளமும் கட்டப்பட்டது. இதில் 4 வகுப்பறைகள், 3 பயிற்சிக்கூடங்கள், ஒரு ஆய்வுக்கூடம், கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கான அறைகள் உள்ளன.

புதிய கட்டிடத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாந்தா, மருதராஜா எம்.பி., தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் முதன்மைக்கல்வி அலுவலர் அருளரங்கன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பேரையூர், ஜமீன் ஆத்தூர் மற்றும் கிழுமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் உள்பட இம்மாவட்டத்தில் ரூ.8 கோடியே 56 லட்சம் மதிப்பில் பள்ளி கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

Next Story