குறைதீர்வுநாள் கூட்டத்தில் மாட்டு வியாபாரிகள் புகார் கேளூர் மாட்டுச்சந்தையில் சுங்க கட்டணம் அடாவடி வசூல்


குறைதீர்வுநாள் கூட்டத்தில் மாட்டு வியாபாரிகள் புகார் கேளூர் மாட்டுச்சந்தையில் சுங்க கட்டணம் அடாவடி வசூல்
x
தினத்தந்தி 5 March 2019 3:30 AM IST (Updated: 5 March 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

கேளூர் மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்க வருவோரிடம் சுங்க கட்டணம் அடாவடியாக வசூலிக்கப்படுவதாகவும், எனவே இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, கல்வி உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, சாதி சான்றிதழ் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் போளூரை சேர்ந்த மாட்டு வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

போளூர் தாலுகா கேளூர் மாட்டுச் சந்தையில் மாடு வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என பலர் வந்து செல்கின்றனர். இந்த சந்தையில் மாடுகள் அதிக அளவில் விற்பனை செய்கிறார்கள். ஆனால் சுங்க கட்டணமாக ஒரு வேனுக்கு ரூ.400-ம், லாரிக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும் அடாவடியாக வசூல் செய்கிறார்கள்.

பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதே நடைமுறையில் வந்து கொண்டிருந்தால் சந்தையே இல்லாமல் போய்விடும் என்று அச்சம் ஏற்படுகிறது. எனவே அதிகளவில் பணம் வசூல் செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆரணி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் இந்த பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றோம். நாங்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இதுவரை கிடைக்கவில்லை. எனவே நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வந்தவாசி தாலுகா மாவல்வாடி கொண்டையாங்குப்பம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக பிரித்து தரக் கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் ரேஷன் கார்டுகளை கையில் எடுத்துக்கொண்டு கலெக்டரிடம் ஒப்படைக்க போறோம் என்று கையில் ரேஷன் கார்டுகளை வைத்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் வருகிற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் நல்லூர், மதுரா, கொண்டையாங்குப்பம் ஆகியவை உள்ளடக்கிய கிராம பஞ்சாயத்து உருவாக்கும்போதே பகுதி 1 நல்லூர் எனவும், பகுதி 2 கொண்டையாங்குப்பம் என்றும் பிரிக்கப்பட்டு உள்ளது. ஆதிகாலத்தில் இருந்தே கிராம கணக்குகள் தனித் தனியாக பிரிக்க கடந்த ஜனவரி 22-ந் தேதி கலெக்டரின் உத்தரவின் படி தாசில்தார் அமைதிக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இதுவரை பீஸ் கமிட்டி நடத்தபடவில்லை. தனி வருவாய் கிராமமாக பிரிக்கக் கோரி கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஒரு ஓட்டுக் கூட போடாமல் தேர்தலை புறக்கணித்தனர். அந்த நாள் முதல் தற்போது வரை தனி வருவாயாக பிரிக்கவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலையும் கொண்டையாங்குப்பம் கிராம மக்கள் புறக்கணிக்க உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் “ இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சென்றனர்.

Next Story