கோவில்பட்டி அருகே, ஆசிரியர் கொலையில் 4 பேர் கைது - முன்னாள் யூனியன் தலைவி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


கோவில்பட்டி அருகே, ஆசிரியர் கொலையில் 4 பேர் கைது - முன்னாள் யூனியன் தலைவி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் முன்னாள் யூனியன் தலைவி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆத்திகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் நயினார். இவருடைய மகன் கணேசமூர்த்தி (வயது 32). இவர் பசுவந்தனை அருகே சில்லாங்குளத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவில் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென்று கணேசமூர்த்தியை வழிமறித்து, அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட கணேசமூர்த்தியின் உறவினரான இளம்பெண் பிளஸ்-2 படித்து உள்ளார். அவரை திருமணம் செய்வதற்கு 17 வயது வாலிபர் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று பெண் கேட்டார். ஆனால் அவர்கள் 2 பேருமே திருமண வயதை அடையாதவர்கள் என்பதால், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு ஆசிரியர் கணேசமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அந்த வாலிபர் தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்து தருமாறு கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதையடுத்து கணேசமூர்த்தி அந்த வாலிபரை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபரின் குடும்பத்தினர், உறவினர்கள் கணேசமூர்த்தியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆசிரியர் கணேசமூர்த்தி கொலை தொடர்பாக ஆத்திகிணறு கிராமத்தைச் சேர்ந்த தங்க பாண்டியன் மகன் சுந்தரபாண்டி (22), ராஜேந்திரன் மகன் அஜித் (23), பிச்சையா மகன் முருகன் (23), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் விக்னேசுவரன் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய ஒரு கார், 2 அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவான ஆத்திகிணறு கிராமத்தைச் சேர்ந்த பண்ணையார் மகன் பொன் மகாராஜா (24), பொன்னையா மகன் தங்கபாண்டியன், அவருடைய மனைவி பேச்சியம்மாள் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பேச்சியம்மாள், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் முன்னாள் தலைவி என்பது குறிப்பிடத்தக்கது. பெண் கேட்டு தர மறுத்ததால், ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story