பண்ருட்டி அருகே, ஏரியில் மூழ்கி பலியான கல்லூரி மாணவர் உடல் மீட்பு
பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி பலியான கல்லூரி மாணவர் உடல் மீட்கப்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள ஆத்திரிக்குப்பத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் செல்வபாண்டியன்(வயது 21). இவர் பெங்களூருவில் தங்கி, அங்குள்ள ஒரு தொழில் நுட்ப கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் செல்வபாண்டியன் கடந்த சிலநாட்களுக்கு முன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு செல்வபாண்டியன் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக மேல்காங்கேயன்குப்பம் ஏரிக்கு சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த செல்வபாண்டியன் ஏரியில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் செல்வபாண்டியன் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் இறங்கி, செல்வபாண்டியனை தேடும் பணியில் நேற்று முன்தினம் மாலை வரை ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை மேல்காங்கேயன்குப்பம் ஏரிக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது செல்வபாண்டியன் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story