வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 5 March 2019 4:30 AM IST (Updated: 5 March 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ராதாபுரம்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரம் அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55) விவசாயி. இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறு ஏற்பட்டது. இதனால் செல்லத்துரையின் மனைவி மும்பையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் செல்லத்துரை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் செல்லத்துரை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்லத்துரை உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளையை சேர்ந்தவர் முருகேசன் என்ற குமார் (வயது 45) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பழவூர் அருகே கூட்டப்புளியில் நடந்த திருவிழாவில், அங்குள்ள மிட்டாய் கடையில் வேலை செய்ய வந்திருந்தார். நள்ளிரவில் குடும்ப பிரச்சினை காரணமாக தனது வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரத்தில் முருகேசன் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story