நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் புதிய கணக்கு எழுதுவார்கள் - நெல்லையில் டி.டி.வி.தினகரன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் புதிய கணக்கு எழுதுவார்கள் - நெல்லையில் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் புதிய கணக்கு எழுதுவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

நெல்லை, 

அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல பிஷப் பங்களாவுக்கு சென்று, பிஷப் ஜே.ஜே.கிறிஸ்துதாசை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் டி.டி.வி. தினகரன், பிஷப் பங்களா வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி பிஷப்பிடம் ஆசிர்வாதம் பெற வந்துள்ளேன். இது தேர்தலுக்கான மதசார்ப்பற்ற நிலை அல்ல. வாக்கு வங்கிக்காக, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேஷம் போடும் இயக்கம் அ.ம.மு.க. கிடையாது. மக்களுக்காக பணியாற்றுகிற இயக்கம் ஆகும்.

தமிழ்நாட்டில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் மற்றும் பிற மதங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் சகோதரர்கள். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுபோடலாம். ஆனால் நமக்குள் சகோதரத்துவம் வேண்டும். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ வேண்டும் என்ற கொள்கையில் முழுமூச்சாக இருக்கிறோம்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தது பற்றி கேட்கிறீர்கள். இருட்டில் தனியாக போவதற்கு பயப்படுகிறவர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு விசிலடித்துக் கொண்டு செல்வது போல் செல்கிறார்கள். அதேபோல் அவர்களுக்கு மக்களை சந்திக்க பயம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரை பற்றி அவதூறாக பேசியவர்கள், அந்த மாபெரும் தலைவரை மரியாதை குறைவாக தரம் தாழ்ந்துபேசியவர்களுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து உள்ளனர். டாக்டர் அன்புமணி வார்த்தையில் கூற வேண்டும் என்றால் மானங்கெட்ட கூட்டணி அமைத்து உள்ளனர்.

ஜெயலலிதாவின் தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் எங்களோடு இருக்கிறார்கள். ஜெயலலிதா வழியில் ஒருசில கட்சியுடன் பேசி வருகிறோம். தற்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டு 1 தொகுதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 2 கட்சியுடன் பேசி வருகிறோம். 38 சீட் வரை அ.ம.மு.க. போட்டியிடுவோம். நாங்கள் சின்ன கட்சிதான், அந்த நிலையில் பேசி வருகிறோம். பெரிய கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம்.

காங்கிரஸ் கட்சி 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தது. அப்போது இலங்கையில் 1½ லட்சம் பேர் படுகொலை செய்த போது அந்த கூட்டணியில் இருந்த தி.மு.க. என்ன செய்தது. 1996-ம் ஆண்டு வரை 2014 வரை பஸ், ரெயிலில் மாறி மாறி ஏறுவது போல் தி.மு.க. கூட்டணி மாற்றிக்கொண்டே இருந்தது.

இதனால் தி.மு.க. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தனர். 2016-ம் ஆண்டு ஏற்பட்ட அனுபவம், எல்லாவற்றுக்கும் மேல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட்டணி கணக்கு போட்டு போட்டியிட்டு படுதோல்வி அடைந்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது தி.மு.க. வேட்பாளர் 57 ஆயிரம் ஓட்டு பெற்றார். இடைத்தேர்தலில் நான் போட்டியிட்ட போது 29 ஆயிரம் ஓட்டுதான் பெற்றார். மீதி ஓட்டு எங்கே போனது என்று தெரியவில்லை.

இதே நிலைதான் தமிழ்நாட்டில் வரும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க.வின் வெற்றிக்கான மாதிரி தேர்தல்தான். தமிழக மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கணக்குதான் எழுதுவார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் புதிய கணக்கு எழுத உள்ளனர். அது விரைவில் வெளிப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்க ராஜா, மாவட்ட செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம், பாப்புலர் முத்தையா, சொக்கலிங்கம், அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், நிர்வாகிகள் பரமசிவ அய்யப்பன், எம்.சி.ராஜன், ஹைதர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ம.தி.மு.க. பகுதி செயலாளர் வடிவேல், டி.டி.வி. தினகரன் முன்னிலையில் தன்னை அ.ம.மு.க.வில் இணைத்துக் கொண்டார். 

Next Story