ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றும் அரசு ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்பட ஊரக வளர்ச்சித்துறையினர் பலர் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசுப்பணிகள் பாதிக்கப்பட்டன.