“சாதி மோதல் உருவாகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” நெல்லை மாநகர புதிய துணை போலீஸ் கமிஷனர் சாம்சன் பேட்டி
சாதி மோதல் உருவாகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர புதிய துணை போலீஸ் கமிஷனர் சாம்சன் கூறினார்.
நெல்லை,
நெல்லை மாநகர போலீஸ் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த சுகுணாசிங், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மாநகரத்தில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சாம்சன் நெல்லை மாநகர புதிய துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகர பகுதியில் சட்டம்-ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படும். மக்கள் கமிஷனர் அலுவலகத்திலும், போலீஸ் நிலையங்களிலும் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ள மனுக்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அதிகம் பாதிக்கின்ற கஞ்சா முற்றிலுமாக ஒழிக்கப்படும். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதி மோதல்கள் எப்படி உருவாகிறது என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின்கம்பங்களில் வரையப்பட்டுள்ள சாதி ரீதியான கொடிகள், வண்ணங்கள் அழிக்கப்படும். சாதி மோதல்கள் உருவாகாமல் தடுக்க ஆரம்பக்கட்டத்திலேயே உரிய நடவடிக்கை எடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தற்போது புதிதாக தான் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பான முறையில் செய்தாலே சட்டம்-ஒழுங்கை முறையாக பராமரிக்கலாம். இதுகுறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கப்படும். மன உளைச்சலில் உள்ள போலீசாரை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்று உள்ள சாம்சன் 2001-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக முதலில் விளாத்திகுளத்தில் பொறுப்பு ஏற்றார். பின்னர் சிவகங்கையிலும், கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று தஞ்சை, சென்னையிலும் பணியாற்றினார். 2013-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு வகித்தார். பின்னர் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னையில் துணை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றினார். தற்போது நெல்லை மாநகர போலீஸ் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்று உள்ளார்.
Related Tags :
Next Story