அவினாசி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
அவினாசி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூர் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 42). இவர் தெக்கலூரில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மோட்டார்சைக்கிளில் தெக்கலூரில் இருந்து கோவிந்தாபுரம் நோக்கி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஒரு மின் கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாணிக்கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.