பல்லடம் அருகே கார் தீப்பிடித்து எரிந்தது 3 பேர் உயிர் தப்பினர்


பல்லடம் அருகே கார் தீப்பிடித்து எரிந்தது 3 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 5 March 2019 3:53 AM IST (Updated: 5 March 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பல்லடம்,

பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் டிரைவருடன் சேர்ந்து மொத்தம் 3பேர் பயணம் செய்தனர். இந்த கார் பல்லடத்தை அடுத்த லட்சுமி மில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை, சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

அதற்குள் கார், திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் காரின் கதவை திறந்து கொண்டு அவசரமாக வெளியே வந்தனர். இதனால் அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது குறித்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அதிகாரி பொன்னுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் எரிந்து நாசம் ஆனது.

பல்லடத்தை அடுத்த முத்தாண்டிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). விவசாயி. இவர் தனது வீட்டு முன்பு மாடுகளுக்கு தேவையான மக்காச்சோளத்தட்டுகளை வைத்து இருந்தார். இந்த நிலையில் இந்த மக்காச்சோளத்தட்டு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே இது குறித்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் சோளத்தட்டுகள் அனைத்தும் எரிந்து நாசம் ஆனது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story