மானாமதுரை அருகே வாடகை முன்பணம் தராததால் வங்கி கட்டிடத்துக்கு பூட்டு போட்ட உரிமையாளர் வாடிக்கையாளர்கள் அவதி


மானாமதுரை அருகே வாடகை முன்பணம் தராததால் வங்கி கட்டிடத்துக்கு பூட்டு போட்ட உரிமையாளர் வாடிக்கையாளர்கள் அவதி
x
தினத்தந்தி 4 March 2019 10:30 PM GMT (Updated: 4 March 2019 10:30 PM GMT)

வாடகை முன்பணம் தராததால் வங்கி கட்டிடத்துக்கு, அதன் உரிமையாளர் நேற்று காலை பூட்டு போட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே கடந்த 2013–ம் ஆண்டு பவளவன்னி என்பவரது கட்டிடத்தில், ஒரு வங்கி வாடகைக்கு தொடங்கப்பட்டது. கட்டிடத்திற்கு வாடகையாக மாதம் ரூ.5 ஆயிரமும், முன்பணமாக ஒரு லட்ச ரூபாயும் வங்கி தரப்பில் நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வீட்டை வங்கி செயல்பட ஏதுவாக மாற்றங்கள் செய்து தரும்படியும், அந்த தொகையை வங்கி நிர்வாகம் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை மாற்றி அமைப்பதற்காக செலவு செய்த 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், முன்பணம் ஒரு லட்ச ரூபாயும் தரப்படவில்லையாம். மேலும் வாடகை ஒப்பந்த பத்திரமும் போடவில்லையாம். இதுபற்றி கட்டிட உரிமையாளர் பவளவன்னி வங்கி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும், கடிதம் மற்றும் இ–மெயில் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை வங்கிக்கு வந்த பவளவன்னி, வங்கி கட்டிடத்துக்கு பூட்டு போடப்பட்டதுடன், வங்கி உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து வங்கி நிர்வாகம் மானாமதுரை போலீசில் புகார் செய்தது. நேற்று பகல் 12 மணி வரை வங்கி திறக்கப்படாததால் வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு காத்திருந்தனர்.

இதுபற்றி பவளவன்னி கூறுகையில், பலமுறை வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டும், நேரிலும், தபாலிலும் மனு அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. எங்கள் கிராமத்திற்கு வங்கி வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக கட்டிடத்தை வாடகைக்கு கொடுத்தேன். ஒப்பந்த பத்திரம் போட சொல்லி பலமுறை வலியுறுத்தியும், வங்கி நிர்வாகம் அதை கண்டு கொள்ளவில்லை. செலவீன தொகையையும் தரவில்லை என்றார்.

இதுகுறித்து வங்கி கிளை மேலாளர், சென்னையில் உள்ள வங்கி உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் போலீசார் வந்து நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, பகல் 12.30 மணிக்கு வங்கி மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின்பு அங்கு பரபரப்பு முடிவுக்கு வந்தது.


Next Story