கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்


கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 March 2019 11:00 PM GMT (Updated: 4 March 2019 10:56 PM GMT)

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கலெக்டரிம் மனுவும் கொடுத்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவஞானத்திடம் மனு கொடுக்க வந்தோர் முன்னதாக போராட்டம் நடத்திவிட்டு மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடந்த 8 ஆண்டுகளாக பாலுக்கு விலை உயர்வு செய்யப்படாத நிலையில் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 என்றும், எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.45 என்றும் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும் பாலுக்கு 10 தினங்களுக்கு ஒரு முறை பாக்கி இன்றி பணப் பட்டுவாடா செய்ய வலியுறுத்தியும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை தரையில் கொட்டி கோ‌ஷம் எழுப்பினர்.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு மனையும், வீடும் வழங்ககோரி சங்க தலைவர் தங்கராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளும், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி மற்றும் முன்னாள் எம்.பி. லிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அடிப்படை வசதி

பாவாலி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாவாலி கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் மயானம் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அதனை மராமத்து செய்து தர வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிர்வாகத்தில் நடத்தப்பட்டு வரும் மாணவர் விடுதிகளில் மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் 25 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Next Story