குழந்தையின் உடல் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம்: சிறுமியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த வாலிபர் கைது பாட்டியிடம் தொடர்ந்து விசாரணை
குழந்தையின் உடல் கால்வாயில் வீசப்பட்ட சம்பவத்தில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். குழந்தை இறந்தது எப்படி? என்பது குறித்து பாட்டியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கிடந்தது. தகவல் அறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குழந்தையின் உடலை மீட்டு, மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் பையில் குழந்தையின் உடலை கொண்டு வந்து, கால்வாயில் வீசிய காட்சிகள் பதிவாகி இருந்தன.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் மதுரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அவரது 17 வயது மகளுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரமணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கர்ப்பம் அடைந்த அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததுள்ளது. அந்த குழந்தையின் உடல்தான் கால்வாயில் வீசப்பட்டுள்ளது.
குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், குழந்தையின் தலையில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், தென்காசியில் முறுக்கு கடையில் வேலை பார்த்த போது உடன் வேலை பார்த்த புதுக்கோட்டை மாவட்டம் சோத்துபாளையத்தை சேர்ந்த ராசு மகன் வீரமணி(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஆசை வார்த்தை கூறி தன்னை கர்ப்பமாக்கினார். அதன்பின்னர் நாங்கள் மதுரைக்கு வந்து விட்டோம். இங்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை என்னுடைய தாயார் வாங்கி சென்றார் என்று அந்த சிறுமி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செல்லூர் போலீசார், சிறுமியின் தாயாரை நேற்று கைது செய்தனர். அந்த குழந்தை வீட்டில் இருக்கும் போது இறந்ததா அல்லது அவர்கள் கொலை செய்து கால்வாயில் வீசினார்களா என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சிறுமியை சீரழித்த வீரமணியை அவரது சொந்த ஊருக்குச் சென்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.