பிரசவத்துக்கு மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


பிரசவத்துக்கு மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 March 2019 4:58 AM IST (Updated: 5 March 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

பிரசவத்துக்கு மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வீடு திரும்பிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் தேவிகா நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 34), வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி கோகிலாம்மாள். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கோகிலாம்மாள் மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவரை 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஜெயபாலன் அனுமதித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜெயபாலன் ஆஸ்பத்திரிக்கு சென்று மனைவியை பார்த்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர், வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவரது உறவினர்கள் நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஜெயபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயபாலன் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story