அபிஷேகப்பாக்கத்தில் மின் இணைப்பை துண்டிக்க கிராம மக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்


அபிஷேகப்பாக்கத்தில் மின் இணைப்பை துண்டிக்க கிராம மக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
x
தினத்தந்தி 5 March 2019 5:15 AM IST (Updated: 5 March 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

அபிஷேகப்பாக்கத்தில் மின் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து மின்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

பாகூர்,

புதுவை மாநிலத்தில் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை வசூல் செய்யும் பணியில் மின்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களிலும், சில நாட்களுக்கு முன்பு திருபுவனை கூட்டுறவு நூற்பாலையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்புகளை துண்டிக்க மின்துறை அதிகாரிகள் நேற்று சென்றனர். அங்கு கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளை அடையாளம் கண்டு மின் இணைப்புகளை துண்டித்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் மின்துறை அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் மின் இணைப்பை துண்டிப்பதில் மும்முரம் காட்டினர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல லட்சம் ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் மின் இணைப்புகளை துண்டிக்காமல், ஏழைகளின் வீடுகளில் மின்சாரத்தை எப்படி துண்டிக்கலாம்? பிளஸ்–2 பொதுத்தேர்வு நடைபெறும் நேரத்தில் மின்சாரம் இல்லையென்றால் பிள்ளைகள் எவ்வாறு படிப்பார்கள்? என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்கள் மற்றும் மின்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டு, அதிகாரிகள் அங்கிருந்து சென்றார்.


Next Story