வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 March 2019 4:30 AM IST (Updated: 5 March 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,


நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி அதிகாரிகள், போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் 984 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாவட்டம், விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு தேர்தல் பணியில் நேரடி தொடர்பு கிடையாது என்பதால் இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 2 நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2–வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.


இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலர்கள் வழக்கம் போல வந்தனர். ஆனால் அவர்கள் பணி எதையும் மேற்கொள்ளாமல் தங்களது இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் 538 பேர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தினால் ரூ.2 ஆயிரம் தமிழக அரசின் நிதியை பெறுவதற்காக, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. மேலும் 100 நாள் வேலை திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டன.

Next Story