ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளின் நீர்மட்டம் சரிந்து வருவதால் ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி பேரூராட்சி மற்றும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் இருந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தேனி கலெக்டர் அலுவலகம், நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வைகை ஆறு வறண்டு காணப்படும் நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 170 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் போதிய நீர்இருப்பு இல்லாத காரணத்தால் மிகவும் குறைந்த அளவு தண்ணீரே திறக்கப்படுகிறது.

இந்தநிலையில் வைகை ஆற்றின் ஓரம் விவசாயத்திற்காக மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கும் காரணத்தால் குன்னூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அடியோடு சரிந்துள்ளது. மிகவும் குறைந்த அளவு தண்ணீரே வைகை ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் நீர்வரத்து அடியோடு நின்றுவிடும் நிலை உள்ளது.

நீர்வரத்து குறைந்த காரணத்தால் குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வருகிறது. போதிய மணல் பரப்பு இல்லாததால் கிணற்றில் நீர்சுரப்பது குறைந்துவிட்டது.

இதன்காரணமாக குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் இனிவரும் நாட்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் குடிநீரின்றி கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

எனவே பாதிக்கப்படும் பகுதிகளில் குடிநீர் தேவையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story