கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்தது, காதல் திருமணம் செய்த இளம்பெண் உடல் கருகி சாவு


கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்தது, காதல் திருமணம் செய்த இளம்பெண் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 5 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-06T00:07:42+05:30)

உடன்குடி அருகே, கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததால் இளம்பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப்பாடு சுனாமி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் தினேஷ் (வயது 25). மீனவர்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் எடிசன் மகள் ரவீனா (23). இவர்கள் 2 பேரும் காதலித்து, கடந்த 12-11-2017 அன்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ரவீனா தன்னுடைய கணவரின் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 1-ந்தேதி ரவீனா வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ரவீனாவை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 1½ ஆண்டில் இளம்பெண் தீயில் கருகி இறந்ததால், திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) சிம்ரான்ஜீத் சிங் கலோன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story