2 பெண்களிடம் நகை பறித்த, ரெயில் கொள்ளையர்கள் 6 பேருக்கு 3 ஆண்டு சிறை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
2 பெண்களிடம் நகை பறித்த ரெயில் கொள்ளையர்கள் 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வடக்கு காட்டன் ரோட்டை சேர்ந்தவர் அன்ட்ரூஸ் ஞானசேகர். இவருடைய மனைவி பெனிட்டா சியாமளா. இவர் கடந்த 2-6-2017 அன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். அப்போது ரெயிலில் வந்த வடமாநில வாலிபர்கள் 6 பேர், பெனிட்டா சியாமளா வைத்து இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 தங்கச்சங்கிலியை திருடி சென்று விட்டனர்.
இதேபோல் சென்னையை சேர்ந்த புளோரா பர்னாந்து என்பவர் கடந்த 20-5-18 அன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயிலில் வந்தார். அப்போது மர்மநபர்கள் 6 பேர், புளோரா பர்னாந்து அணிந்து இருந்த தாலி சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவங்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (வயது 24), மனீஷ்குமார் (24), ராகேஷ்குமார் யாதவ் (30), அபிமன்யுகுமார் சிங் (32), சோனுசவுராசியா (33), மின்டுபிரசாத் (33) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்கள் பீகாரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து, இங்கு தங்கியிருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் ரெயிலை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில் கொள்ளையர்கள் 6 பேரையும் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி, குற்றம் சாட்டப்பட்ட நிதீஷ்குமார், மனீஷ்குமார், ராகேஷ்குமார் யாதவ், அபிமன்யுகுமார் சிங், சோனுசவுராசியா, மின்டுபிரசாத் ஆகிய 6 பேருக்கும் 2 வழக்குகளிலும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், அதனை ஏககாலத்தில் அனுபவிக்கும்படியும் நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆனந்தன் ஆஜர் ஆனார்.
Related Tags :
Next Story