கும்மிடிப்பூண்டி அருகே ஆம்னி பஸ்சில் ரூ.1½ கோடி சிக்கியது


கும்மிடிப்பூண்டி அருகே ஆம்னி பஸ்சில் ரூ.1½ கோடி சிக்கியது
x
தினத்தந்தி 5 March 2019 11:15 PM GMT (Updated: 5 March 2019 6:52 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்சில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1½ கோடியை போலீசார் கைப்பற்றினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று காலை காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போதைபொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சீத்தாராம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் பயணம் செய்த சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் 2 பெரிய கருப்பு பைகளை வைத்திருந்தார். பையில் என்ன உள்ளது? என போலீசார் கேட்க, அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

பின்னர் 2 பைகளையும் போலீசார் சோதனை செய்த போது, அதில் செய்திதாள்களில் சுற்றப்பட்டு கட்டு கட்டாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 பண பண்டல்கள் பல இருப்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் பணத்துடன் வந்த நபர் ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஹிம்மத் நகர் நாராயண்குடாவை சேர்ந்த நீரஜ்குப்தா (வயது 47) என்பது தெரியவந்தது.

பணத்துடன் வந்த நீரஜ் குப்தாவை ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு பைகளில் இருந்த ரொக்கப்பணத்தை போலீசார் பணம் எண்ணும் எந்திரம் மூலம் கணக்கிட்டனர். அந்த பைகளிலும் மொத்தம் ரூ.1 கோடியே 53 லட்சம் இருப்பது தெரியவந்தது.

தான் ஒரு வெள்ளி வியாபாரி என்றும் இந்த பணத்தை கொண்டு வெள்ளி வாங்குவதற்காக சென்னை வந்ததாக பணத்துடன் பிடிபட்ட நீரஜ் குப்தா தெரிவித்தார். இருப்பினும் மேற்கண்ட பணத்தை எடுத்து செல்வதற்காக முறையான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணத்துடன் பிடிபட்ட நபரையும், பணத்தையும் சென்னை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Next Story