தமிழகத்திற்கு 28 வகையான வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்து விட்டது திருச்சியில் நடந்த கருத்தரங்கில் தகவல்


தமிழகத்திற்கு 28 வகையான வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்து விட்டது திருச்சியில் நடந்த கருத்தரங்கில் தகவல்
x
தினத்தந்தி 6 March 2019 4:30 AM IST (Updated: 6 March 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் தாக்கத்திற்கு பின்னர் தமிழகத்திற்கு 28 வகையான வெளிநாட்டு பறவைகளின் வருகை குறைந்து விட்டது என்று திருச்சியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கல்லூரியில் நேற்று, மாற்றங்களில் இருந்து உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி தேர்வு நெறியாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கருத்தரங்கின் அமைப்பாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை முன்னாள் தலைவர் அர்ஜுனன் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் வனப்பாதுகாப்பு துறை விஞ்ஞானி குமரகுரு ‘ஈரநில உயிரினங்களுக்கு சூழலியல் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

பறவைகள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் ஈர நிலங்களை தேடி கண்டம் விட்டு கண்டம் தாண்டியும், நாடு விட்டு நாடு இடம் பெயர்ந்தும் பறந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை காவிரி டெல்டா பாசன பகுதிகள் பறவைகளுக்கு ஏற்ற ஈரநிலங்களாக உள்ளன. எனவே பறவைகள், விலங்குகளின் வாழ்வாதாரத்திற்காக ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். ஈர நிலங்களை ஆறு, குளங்களால் உருவாகும் இயற்கை ஈரப்பகுதி, கடற் பகுதி, மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் ஈரப்பகுதி என 3 வகையாக பிரிக்கலாம்.

வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான ஒரு அமைப்பு ஈரான் நாட்டில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பிடம் இருந்து தமிழக அரசு ரூ.60 கோடி நிதி உதவி பெற்று பறவைகள் சரணாலய பராமரிப்பு, மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 8 முக்கிய சரணாலயங்களுக்கு கடந்த மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் மட்டும் சுமார் 48 ஆயிரம் பறவைகள் வந்து உள்ளன. கஜா புயல் தாக்கத்திற்கு பின்னர் தமிழகத்திற்கு 28 வகையான வெளிநாட்டு பறவைகளின் வருகை குறைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் திருச்சி நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

Next Story