காரமடை அருகே, சுடுகாட்டில் தொழிலாளி அடித்துக்கொலை - போலீசார் விசாரணை


காரமடை அருகே, சுடுகாட்டில் தொழிலாளி அடித்துக்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 6 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே சுடுகாட்டில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெரியபுத்தூர் சுடுகாட்டில் ரத்த காயங்களுடன், அரை நிர்வாண நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக காரமடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி தலைமையில், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்தவரின் தலை, கால் உள்பட உடல் முழுவதும் ஆணியுடன் கூடிய கட்டையால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எனவே அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ஹேரி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தொடர்ந்து தடயவியல் ஆய்வக உதவி இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்தில் கிடைத்த மரக்கட்டைகள் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் இறந்து கிடந்தவரின் சட்டை பையில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதில் 2 செல்போன் எண் இருந்தது. அந்த எண் அவினாசி அருகே தென்னம்பாளையத்தில் உள்ள டெய்லர் கடையின் உரிமையாளருடையது ஆகும்.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாண்டி (வயது 36) கூலிதொழிலாளி என்பதும், திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர் கடந்த வாரம் தான் தென்னம்பாளையத்தில் உள்ள டெய்லர் கடையில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். பின்னர் குரும்பபாளையத்தில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 3-ந் தேதி கடையில் இருந்து ஒருவார சம்பள பணத்தை வாங்கி சென்றவர் திரும்பி வரவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த கொலை தொடர்பாக பெரியபுத்தூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதுபோன்று கொலை செய்யப்பட்ட நபர் அவினாசியில் இருந்து பெரியபுத்தூர் சுடுகாட்டிற்கு எதற்காக வந்தார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.

Next Story