திருமானூரில் மணல் குவாரிகளை மூடக்கோரி உண்ணாவிரதம் 3 பேர் கைது


திருமானூரில் மணல் குவாரிகளை மூடக்கோரி உண்ணாவிரதம் 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 5 March 2019 7:37 PM GMT)

திருமானூரில் மணல் குவாரிகளை மூடக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரிகளை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல மாதங்களாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருமானூர் பஸ் நிலையம் அருகே நேற்று கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் மணல் குவாரியை நிறுத்தக்கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்து மணல்களை அள்ளுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். மேலும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து 4 மணி நேரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு உடன்படாத கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அக்குழுவை சேர்ந்த பாளை திருநாவுக்கரசு, பாஸ்கர் மற்றும் கரும்பு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து போராட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story