குடிநீர், தெருவிளக்கு வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு


குடிநீர், தெருவிளக்கு வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 6 March 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர், தெருவிளக்கு வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம், கள்ளூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ் குழாய் கிணற்றில் அமைக்கப்பட்டு இருந்த மின்மோட்டார் பழுதடைந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அக்கிராமத்தின் மயான பகுதியில் உள்ள அடிபம்பில் இருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கள்ளூர் கிராமத்திற்கு சாலை பிரிகிறது. அந்த இடத்தில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அந்த சாலையை கடக்க அக்கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் அவ்விடத்தில் தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டியும், பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பல முறை மனுக்கள் அளித்தனர். ஆனால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன், அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் கிராம மக்கள் அரியலூர்-தஞ்சை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஒன்று கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் மற்றும் கீழப்பழுவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் உடனடியாக பணியாளர்களை வரவழைத்து கள்ளூர் பிரிவு பாதை அருகே மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து குடிநீர் தேவைக்காக ஒரு வாரத்திற்குள் மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story