மதுவில் விஷம் கலந்து கொடுத்து 2 பேரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சிதம்பரம் கோர்ட்டு தீர்ப்பு


மதுவில் விஷம் கலந்து கொடுத்து 2 பேரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சிதம்பரம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 March 2019 4:00 AM IST (Updated: 6 March 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

மதுவில் விஷம் கலந்து கொடுத்து 2 பேரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அருகே உள்ள பூ.மணவெளியை சேர்ந்தவர் அன்பு மகன் சதீஷ் (வயது 25), கொத்தனார். இவர் புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லூரை சேர்ந்த மாரிமுத்து மகள் மகாலட்சுமி(23) என்பவரை காதலித்து கடந்த 15-1-2016 அன்று திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே திருமணத்திற்கு முன்பு, மகாலட்சுமி சிதம்பரம் கொத்தவாசல் தெருவில் கவரிங் நகை செய்யும் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அதன் உரிமையாளர் ராஜசேகருக்கும்(38), மகாலட்சுமிக்கும் இடையே பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

திருமணத்திற்கு பின்பு இது கள்ளக்காதலாக மாறியது. திருமணம் நடந்த அன்றைய நாள் முதல் இருந்தே மகாலட்சுமி அவ்வப்போது, தனது கள்ளக்காதலன் ராஜசேகரிடம் செல்போனில் பேசி வந்தார். இதுபற்றி அறிந்த சதீஷ், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மகாலட்சுமி ராஜசேகரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

மகாலட்சுமி தன்னிடம் பேசாமல் இருப்பதற்கு சதீஷ் தான் காரணம் என்று எண்ணிய ராஜசேகர், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து சதீசை தொடர்பு கொண்ட ராஜசேகர், திருமண விருந்து வைப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய சதீஷ் 19-1-2016 அன்று தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(25) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பூ.மணவெளி ரோட்டில் உள்ள அய்யனார்கோவில் அருகே சென்றார். அப்போது ராஜசேகர் சதீசுக்கும், மணிகண்டனுக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம்சுமத்தப்பட்ட ராஜசேகருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பு அளித்தார். மேலும் இந்த தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ராஜசேகர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி வாதாடினார்.

Next Story