2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் - வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், அரசு ஊழியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து 2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களில் 11 பேர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினர் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் அந்தந்த தாலுகா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போரா ட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜோஷி, துணைத்தலைவர்கள் ரமேஷ், மீரா பென்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், வருவாய்த்துறையினரை மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டிப்பது மற்றும் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இதில், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் 367 வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறையினரும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினரின் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் தேர்தல் பணிகள் பாதிக்கப்பட்டன.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பிரதம மந்திரியின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.சி.வீரமணி, வருவாய்த்துறை அலுவலர்களின் உள்ளிருப்பு போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள் என்று கூறி விட்டு விழாவில் கலந்து கொள்ள சென்றார்.
Related Tags :
Next Story