பட்டிவீரன்பட்டி பகுதியில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரம்


பட்டிவீரன்பட்டி பகுதியில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 March 2019 10:45 PM GMT (Updated: 5 March 2019 8:41 PM GMT)

பட்டிவீரன்பட்டி பகுதியில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, எம்.வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா, வாழை மற்றும் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி மாதத்திலேயே கோடை காலம் தொடங்கியதால் திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் மாவட்டம் முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றது. இதனால் பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகள் வறண்டு வருகின்றன. ஆழ்துளை கிணறுகளில் மட்டும் குறைந்த அளவு தண்ணீர் இருக்கிறது.

அந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் எடுத்து விவசாய கிணறுகளில் சேமித்து வைத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஏற்கனவே கிணறுகள் வறண்டு கிடப்பதால் அதில் ஊற்றப்படும் தண்ணீரில் பெரும்பகுதி நிலத்தால் உறிஞ்சப்பட்டுவிடுகிறது. இதனால் விவசாயத்துக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.

தண்ணீர் வீணாவதை தடுக்க விவசாயிகள் தற்போது பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரூ.25 ஆயிரத்தில் தங்கள் நிலங்களில் 20 அடி வரை பள்ளம் தோண்டி அதில் தார்பாய்களை விரித்து வைத்து பண்ணை குட்டைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். இதன் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். 

Next Story