அருப்புக்கோட்டை அருகே விபத்து, லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது: கணவன்-மனைவி கருகிச்சாவு - 2 பேர் படுகாயம்


அருப்புக்கோட்டை அருகே விபத்து, லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது: கணவன்-மனைவி கருகிச்சாவு - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-06T02:11:48+05:30)

அருப்புக்கோட்டை அருகே லாரி மீது மோதிய கார் தீப்பிடித்து கணவன்-மனைவி பலியாயினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அருப்புக்கோட்டை,

கோவை டவுன்ஹால் ராஜவீதியைச் சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது 45). இவர் தனது மனைவி மாரீஸ்வரி (40), தம்பி முருகப்பெருமாள் (39), மாமியார் கண்ணியம்மாள் ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றார். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு அதே காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பக்கம் வேலாயுதபுரம் பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கம்பியில் மோதி சாலையின் மறுபக்கம் பாய்ந்தது.

அந்த நேரத்தில் எதிரே மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே காருக்குள் இருந்த அனைவரும் கூச்சலிட்டனர்.

இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்தவர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து காருக்குள் இருந்தவர்களை மீட்டனர். ஆனால் அதற்குள் கண்ணாயிரம் தீயில் கருகி இறந்து விட்டார். பின்னர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கண்ணாயிரத்தின் மனைவி மாரீஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கண்ணியம்மாளும், முருகப்பெருமாளும் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story