திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 16 வழக்குகளில் தொடர்புடைய சென்னை வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 16 வழக்குகளில் தொடர்புடைய சென்னை வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 March 2019 10:45 PM (Updated: 5 March 2019 9:09 PM)
t-max-icont-min-icon

திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 16 வழக்குகளில் தொடர்புடைய சென்னை வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்,

வேலூரை அடுத்த செதுவாலை கிராமத்தை சேர்ந்தவர் அஷ்வத்தாமன் (வயது 37). இவர் பொய்கை மெயின்ரோட்டில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். அஷ்வத்தாமன் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. கடையில் வைத்திருந்த ஒரு கிலோ வெள்ளி நகைகள் திருட்டு போனது.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்வையிட்டார். அதில், முகமூடி அணிந்த மர்மநபர் கடைக்குள் புகுந்து வெள்ளி நகையை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதுதொடர்பான விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது சென்னை செங்குன்றம் அப்டாந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்த ரமேஷ் என்கிற ராதாகிருஷ்ணன் (33) என தெரிய வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 4-ந் தேதி வேலூர் அப்துல்லாபுரம் அருகே காரில் வந்த ராதாகிருஷ்ணனை விரிஞ்சிபுரம் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து, வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

ராதாகிருஷ்ணன் மீது சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் திருட்டு கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் ராமனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராதாகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ராதாகிருஷ்ணனிடம் போலீசார் வழங்கினர்.

Next Story