தாளவாடி அருகே, வனத்துறை சோதனை சாவடியை விவசாயிகள் மீண்டும் முற்றுகை
தாளவாடி வனத்துறை சோதனை சாவடியை விவசாயிகள் மீண்டும் முற்றுகையிட்டார்கள்.
தாளவாடி,
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளால் அடிக்கடி பழுதாகி நின்றதால் நாள்தோறும் போக்குவரத்து பாதித்தது. இதனால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட கலெக்டர் கதிரவன் தடைவிதித்தார். ஆனால் காற்கறிகள் கொண்டு செல்லும் வேன், சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்கள் இரவு 9 மணி வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் காய்கறிகள் கொண்டு செல்லும் வேன், சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக காய்கறி ஏற்றிவந்த வேன்களை தாளவாடி அருகே உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் இரவு விவசாயிகள் காரப்பள்ளம் சோதனை சாவடியை முற்றுகையிட்டார்கள். இந்தநிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் தாளவாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 250 பேர் காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு திரண்டு வந்து மீண்டும் முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆசனூர் புலிகள் காப்பக இயக்குனர் வெங்கட அல்லப்ப நாயுடு, வனச்சரகர் ராஜலிங்கம் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது அதிகாரிகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டு, ‘அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளைத்தான் மாலை 6 மணிக்கு மேல் திம்பம் மலைப்பாதையில் செல்ல கலெக்டர் தடைவிதித்தார். இப்போது திடீரென மாலை 6 மணிக்கே வேன்களையும் நிறுத்த சொன்னால், நாங்கள் எப்படி தாளவாடி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டு செல்வோம். இரவு 9 மணிக்கு மார்க்கெட் முடிந்துவிடும். மறுநாள் கொண்டு சென்றால் காய்கறிகள் அழுகிவிடும்’ என்றார்கள். அதற்கு அதிகாரிகள் இன்னும் 10 நாட்கள் வேண்டுமென்றால் இரவு 9 மணி வரை இலகுரக வாகனங்கள் செல்லலாம். அதற்கு மேல் கலெக்டர் கதிரவன் மற்றும் மாவட்ட தலைமை வன அதிகாரி நாகராஜன் ஆகியோரிடம் உங்களுடைய பிரச்சினைகளை கூறி பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story