குர்லாவில் பட்டப்பகலில் பயங்கரம் ஜாமீனில் வெளிவந்தவர் சுட்டுக் கொலை உறவினர் கைது


குர்லாவில் பட்டப்பகலில் பயங்கரம் ஜாமீனில் வெளிவந்தவர் சுட்டுக் கொலை உறவினர் கைது
x
தினத்தந்தி 6 March 2019 5:00 AM IST (Updated: 6 March 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

குர்லாவில் பட்டப்பகலில், ஜாமீனில் வெளிவந்தவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

குர்லாவில் பட்டப்பகலில், ஜாமீனில் வெளிவந்தவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

சுட்டுக் கொலை

மும்பை குர்லாவை சேர்ந்தவர் ஜானு பவார். இவர் நேற்று காலை அங்குள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜானு பவாரை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில் அவரது உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

இதையடுத்து இருவரும் அங்கிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்த ஜானு பவாரை மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியது.

பழிக்கு பழியா?

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஜானு பவாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஜானு பவார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சொத்து பிரச்சினையில் ஜானு பவார் தனது உறவினர் தீபக் பவார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இந்தநிலையில், கடந்த நவம்பர் மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். எனவே அந்த கொலைக்கு பழிக்கு பழியாக ஜானு பவார் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

கைது

இது தொடர்பாக போலீசார் தீபக் பவாரின் சகோதரர் வினோத் பவார் (வயது 30) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் தான் இந்த கொலையில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது உதவியாளர் தலைமறைவானது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story