காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமி கைவரிசை
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச்சென்றான்.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி, அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர். சலூன்கடை வைத்துள்ளார். இவர் தனது மனைவி மாதேஸ்வரி (43) மற்றும் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி கேரளமாநிலம் கொச்சுவேலியில் இருந்து ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்தார். சேலத்தில் ஜெய்சங்கர் குடும்பத்துடன் ரெயிலில் ஏறினார்.
நள்ளிரவு 1 மணி அளவில் ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக மெதுவாக வந்தது. அப்போது மர்ம ஆசாமி ஒருவன் ரெயிலில் ஏறி, தூங்கிக்கொண்டிருந்த மாதேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை திடீரென பறித்தான். இதனால், திடுக்கிட்டு எழுந்த மாதேஸ்வரி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். உடனே சக பயணிகள் எழுந்து அந்த மர்மநபரை பிடிப்பதற்குள், ரெயிலில் இருந்து கீழே குதித்து மின்னல் வேகத்தில் இருட்டில் ஓடி தப்பிச் சென்று விட்டான்.
இந்த துணிகர சம்பவம் பற்றி, ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் வந்ததும் மாதேஸ்வரி காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் வழக்குப்பதிவு செய்தார். இந்த நகை பறிப்பு சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் எல்லைக்குட்பட்டதால், இந்த வழக்கு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ரெயிலில் தூங்கிய பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.