கடம்பூர் அருகே பரபரப்பு; ரத்த காயங்களுடன் மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி கொலையா? போலீஸ் விசாரணை


கடம்பூர் அருகே பரபரப்பு; ரத்த காயங்களுடன் மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 6 March 2019 7:00 PM GMT (Updated: 2019-03-07T00:30:11+05:30)

கடம்பூர் அருகே ரத்த காயங்களுடன் மரத்தில் தொழிலாளி ஒருவர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள மல்லியம்மன்துர்க்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 35). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி அரப்புளி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு கொய்யா மரத்தில் ரத்த காயங்களுடன் தேவேந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே கடம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் தேவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.

தேவேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடைய மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தேவேந்திரன் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அதைப்பார்த்துவிட்ட அந்த பெண்ணின் கணவர், ஆத்திரத்தில் சுத்தியலை எடுத்து தேவேந்திரனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் இறந்துவிட்ட தேவேந்திரனை தூக்கு மாட்டி மரத்தில் தற்கொலை செய்துகொண்டதுபோல் தொழிலாளி தொங்கவிட்டாரா? அல்லது கள்ளக்காதலியின் கணவரிடம் அடிவாங்கிய அவமானத்தில் தேவேந்திரனே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாரா? என்று தெரியவில்லை.

இந்தநிலையில் தேவேந்திரனை சுத்தியலால் தாக்கிய தொழிலாளி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை பிடித்து விசாரித்தால் உண்மை வெளியே வந்துவிடும் என்று போலீசார் அவரை வலைவீசி தீவிரமாக தேடிவருகிறார்கள்.


Next Story